Friday, February 8, 2013

அவை தின்னப்படுபவை தான்!!!



நான் முதல் இல்லை!
நான் கடைசியும் இல்லை!
நீயும் அதே!
நான் என்பதற்கும் நீ என்பதற்கும்
வலிக்கும், சிலிர்க்கும்..
அவை சிரிப்பவை, அழுபவை..

பெயர் என்ற ஒன்று வாடகைக்கு கொஞ்ச நாள் தங்கிசெல்லும்
நான் என்பது அதுவாக மாறும் வரை!!!
ஒன்றை ஒன்று விழுங்கும்..
மண் விழுங்கும் விதை
அதை விழுங்கும் மரம்
அதை விழுங்கும் பறவை
அதை விழுங்கும் மனிதன்
அதை விழுங்கும் மண்...

நான் என்பது நிற்காமல் ஓடுகிறது
மற்ற நான்களுடன்!!!
கலவியில் கூடுகிறது
சண்டையில் கொல்கிறது
இன்று போன நானை சுற்றி
நாளைக்கு போக இருக்கும் நான்கள் கட்டி அழுகிறது

இருக்கும் வரை நான் என்பது மட்டுமே மையப்புள்ளி
நான் என்பதை சுற்றியே சூரியனும் பூமியும்!!
நேரம் மட்டும் தான் வெவ்வேறாகிறது
ஆனால் எல்லாமே இங்கு தின்னப்படுபவை தான்
ஒன்றும் பாக்கியில்லை..

Monday, February 4, 2013

கடந்து போகிறது!!!


வெளிச்சம்
ஒரு கணத்தில் தாண்டி செல்லும்  தூரம்
மூன்று லட்சம் கிலோமீட்டர் என்று
சொல்லி தந்த பார்னபாஸ் மாஸ்டரின்
மகன் இப்போது அதே வகுப்பில் பாடம் எடுக்கிறாராம்!!!

தாவணியில் ஒரு பொட்டு சேப்பு குச்சிஐஸ் துளி
சிந்தியதில் கோபித்து கொண்டு போன
பள்ளி தோழி எஸ்ஜே
வேலையில்லாமல் திண்டாடி விலைமாதுவாகி
போனவாரம் எய்ட்ஸில் செத்து போய்விட்டாளாம்!!!

பக்கத்துவீட்டை இடித்து புதிதாக கட்டியதில்
ரொம்ப நாளாக இருந்த மாமரம்
வெட்டி விறகாக்கிவிட்டார்களாம்
அதன் மாம்பிஞ்சுகளோடு
ஊறுகாய் போட யாரும் இல்லாது!!!

மகன் ஒருவன் துபாயில் க்ளீனராக
வேலைசெய்துகொண்டு வந்த காசில்
கட்டிய ஆறுமுகம் தாத்தாவின்
மூன்றடுக்கு வீடு முழுக்க
சாம்பிராணி வாசம்!!!

முகம் நசுங்கி வயிறு பிதுங்கி இறந்து போன
நாய்க்குட்டியின் அம்மா
இன்னும் 5 குட்டி இட்டுருக்கிறதாம்!!!

பழைய ரோட்டில் இருந்த வீடுகளை
முற்றத்தோடும் மரங்களோடும்
சேர்த்து விழுங்கிவிட்டதாம்
பளீர் வண்ணத்தில் உயரமான அபார்ட்மெண்ட்கள்!!!

அந்த தெருவில இருக்கும் எல்லா ஜன்னல்களிலும்
தூசு ஆடியபடியே படர்ந்து இருக்கிறது
புழுதி படிய விடாத வாகனங்களின் தாளத்தால்!!!

முறுக்கு சுட்டு கொண்டு வரும் தாத்தா!
கன்னத்தை கிள்ளி முத்தம் தந்துவிட்டு போகும் ஆயா
பிப்பீ ஊதிக்கொண்டு மாட்டை ஓட்டி செல்லும் குடுகுடுப்பை
மீனு வேணுமாம்மா என்று கேட்டு செல்லும் மீன்கார அத்தை
உங்க அப்பாவை இம்மாத்தூண்டா இருக்கும்போதே தெரியும் எனும் ரிக்‌ஷாத்தாத்தாவும் மற்ற ரிக்‌ஷாக்களும்
காணோம்!!!

மொட்டைமாடி தண்ணீர் டேங்கின் மீது
கால்வைத்து ஏறி பார்த்தால்
தெரியும் வயல்கள் தொலைந்து விட்டதாம்!!!

எல்லா வீட்டினுள் இருந்தும் சீரியல் அழுகுரல்
ஏகமாய் ஒளிக்கிறது!!!
என் குட்டி மகனும் மருமகளும் கேட்கிறார்கள்
பம்பரம் என்றால் என்ன என்று!!!
மரங்களை xboxல் வளர்கிறான் இளவரசனான அவன்!!!
கோட்டையில் தனித்து வாழும் இளவரசியாக
வாழ்கிறாள் தன் பொம்மைகளோடு அவள்!!!